டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மூலம் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: TNPSC அறிவிப்பு

tnpsc-group-2-exam-2020-3000-vacancy

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப்-2-ஏ தேர்வுகள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் நிலுவையில் உள்ள தேர்வுகளுக்கான அனைத்து அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2020-ம்ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஜனவரிமாதத்தில் குரூப்-1 தேர்வு, உதவி வேளாண் விரிவாக்க அலுவலர் தேர்வு, தோட்டக்கலை உதவிஇயக்குநர் தேர்வு, உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு ஆகிய 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதில், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு மட்டுமே ஜனவரி 20-ல்வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது. எஞ்சிய 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் வந்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த இன்ஜினீயரிங் பணி தேர்வுக்கான அறிவிப்பும் இன்னும் வரவில்லை. குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் காரணமாக, புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் காலதாமதமானது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் நடப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு படித்து வரும் தேர்வர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமாரிடம் கேட்டபோது, “ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய அனைத்துதேர்வுகளுக்கான அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும்.வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளவாறு குரூப்-2, குரூப்-2-ஏ தேர்வுகளுக்கான அறிவிப்புகள் மே மாதத்தில் வெளியாகும். இதன்மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணிஇடங்கள் நிரப்பப்படும்’’ என்றார்.
குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் போன்ற பணிகளும், குரூப்-2-ஏ தேர்வின்கீழ் பல்வேறு துறைகளின் உதவியாளர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணிகளும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சர்ச்சைக்குள் ளான குரூப்-4 தேர்வில், இளநிலை உதவியாளர், பீல்டு சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இக்கலந்தாய்வு மார்ச் 17-ம்தேதி முடிவடைகிறது. இந்தகலந்தாய்வின்போது, பொதுப்பிரிவில் 182 காலியிடங்கள் இருந்தபோதிலும் அவை 2-வது கட்டகலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்டிருப்ப தாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் ஒருசிலதேர்வர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளரிடம் கேட்டபோது, ‘‘ஒரு காலியிடத்துக்கு 3 பேர்”என்ற விகிதாச்சாரத்தில் பொதுப்பிரிவு காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில், புகார்எழுந்துள்ள 182 காலியிடங்களுக்கு தகுதியான பொதுப்பிரிவினர் உள்ளனர். அதனால்தான் மற்றபிரிவினர் அந்த 182 காலியிடங்களுக்கான கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார்.